Monday, August 27, 2018

எச்சரிக்கை, இது நல்ல சினிமாவை கொண்டாடும் இடம்..! - 'எச்சரிக்கை' விமர்சனம்

எச்சரிக்கை, இது நல்ல சினிமாவை கொண்டாடும் இடம்..! - 'எச்சரிக்கை' விமர்சனம்

பணத்திற்காக மனிதர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள், இறுதியில் அவர்களது மனநிலை எப்படி மாறுகிறது என்பதே 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்'.

 ணம் கொடுக்கவில்லை எனத் தன் அக்காவைக் கொன்ற மாமாவைக் கொல்லும் 19 வயது பாலகன் டேவிட் (கிஷோர்). அவனுக்கு 10 வயதில் ஒரு மச்சான் தாமஸ் (விவேக் ராஜகோபால்). பதினான்கு வருடங்கள் சிறைவாசம் அனுபவித்துவிட்டு வெளியே வந்து பார்த்தால் பைக், கார்களை திருடுவது போன்ற வேலைகளில் பிஸியாக இருக்கிறார் தாமஸ். இருவருக்குள்ளும் இருக்கும் பண ஆசை அவர்களை கிட்நாப்பிங் செய்யத் தூண்டுகிறது. யாரைக் கடத்தாலும் என முடிவு செய்து ஸ்வேதாவை (வரலட்சுமி சரத்குமார்) கடத்துகிறார்கள். பின், வழக்கம் போல அவர் அப்பாவிடம் பணம் கேட்டு மிரட்டுகிறார்கள். அவரும் வழக்கம் போல போலீஸிடம் போகாமல் கொஞ்சம் மாறி ரிட்டயர்ட் டி.ஐ.ஜியான நட்ராஜிடம் (சத்யராஜ்) உதவிக் கேட்கிறார். அவர் கடத்தல்காரர்களை எப்படிக் கண்டுபிடிக்கிறார், அவர்களின் பண ஆசை நிறைவேறியதா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை. 

வசனம், எக்ஸ்பிரஷன்ஸ் எனத் தனக்கான ரோலில் கனக்கச்சிதமாக பொருந்தி நடித்திருக்கிறார் கிஷோர். பயம் கலந்த அசிஸ்டென்ட் கடத்தல்காரனாக நடித்தாலும் காதல் காட்சிகளிலும் நம்மை கவர்கிறார் நாயகன் விவேக் ராஜகோபால். வெல்கம் ப்ரோ! ரிச் ஹவுஸ் மாடர்ன் கேர்ளாக வரும் வரலட்சுமிக்கு ஆரம்பத்தில் இந்த கேரக்டர் பொருந்தவில்லை எனத் தோன்றினாலும் போகப் போகப் பழகிவிடுகிறது. அன்டர் கவர் ஆப்ரேஷனில் இறங்கும் ரிட்டயர்ட் டி.ஐ.ஜி சத்யராஜின் நடிப்பில் அவருக்கான அனுபவம் தெரிகிறது. கலர் கலரான சொக்கா அணிந்துகொண்டு 'முப்பது நாளில் இங்கிலிஷ்' பேசும் தாமஸின் ரூம் மேட் யோகி பாபுவை கொஞ்சம் அதிகமாகவே பயன்படுத்தியிருக்கலாம். வரலட்சுமியின் அப்பா கேரக்டரில் நடிப்பவரின் நடிப்பு கதையுடன் ஒட்டவில்லை. 

 ஆரம்பத்தில் போலீஸைத் தவறாகச் சொன்னதற்கு கோபப்படும் சத்யராஜ், இறுதியில் 'வேலை செஞ்சதுக்கு காசு வாங்குறதுல தப்பு இல்லை' என்று வாங்கிய பணத்தை தன் டீமிற்கு பிரித்துக் கொடுக்கும் காட்சிகள் நெருடல். கார்த்திக் ஜோகேஷின் எடிட்டிங்கும் சுதர்ஷன் ஶ்ரீநிவாசனின் ஒளிப்பதிவும் பாடல் காட்சிகளில் சிறப்பு. அதைக் கதையிலும் செய்திருந்தால் கூடுதல் சிறப்பாக இருந்திருக்கும். ஒரு சில டாப் ஆங்கிள் காட்சிகளில் கேமராவை கையாண்ட விதம் அருமை. சுந்தரமூர்த்தியின் இசையில் 'காலம் உன்னைக் களவு செய்யும் நேரம்' என்ற பாடல் திரையரங்கைவிட்டு வெளியில் வந்தாலும் முணுமுணுக்க வைக்கிறது. பின்னணி இசை அழுத்தமாக இருந்திருந்தால் கதையை அடுத்தகட்டத்திற்கு அழைத்துச்செல்ல உதவியிருக்கும். 

படத்தின் கதாபாத்திரங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அப்படி இருக்கும் பட்சத்தில் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாகத் திரைக்கதை அமைத்திருக்கலாம் எனத் தோன்ற வைக்கிறது. வழக்கமான படங்களில் வரும் கால் ட்ரேசிங், போன் ஹாக்கிங் போன்ற வழக்கமான காட்சிகள் இந்தப் படத்திலும் இடம்பெற்றிருப்பது சலிப்படையச் செய்கிறது. குரலை வைத்துக் கண்டுபிடித்துவிடுவார்கள் என டாக்கிங் டாமை பயன்படுத்தியிருப்பது புதுமை. போகிற போக்கில் சத்யராஜின் ஃப்ளாஷ்பேக்கை சொல்லியிருப்பதால் அது எமோஷனை கடத்தத் தவறுகிறது. கடத்தல் பிளானில் நடக்கும் ட்விஸ்ட்டை மக்கள் கணிக்காமல் இருக்க இயக்குநர் சர்ஜுன் இன்னும் 'எச்சரிக்கை'யாக இருந்திருக்கலாம். 'இது மனிதர்கள் நடமாடும் இடம்' என்ற தலைப்பிற்காகவாவது இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் வெயிடேஜ் கொடுத்திருக்கலாம்.  சிம்பிளாக சொல்லவேண்டும் என்றால் ஷார்ட் ஃபிலிம் மோடிற்கு நம்மை கூட்டிச் செல்கிறார் இயக்குநர் சர்ஜுன்.


புது கதை புது படம் என்று சொல்லிவிட்டு 'இது அதுல்ல' எனப் பார்ப்பவர்களை தோன்றவைக்கும் படங்களுக்கு மத்தியில் மூன்று படங்களின் இன்ஸ்பிரேஷன் என்று அதன் பெயர்களைப் படத்தின் இறுதியில் பதிவு செய்திருப்பதற்கு பாராட்டுகள். ஆனால், அடுத்த முறை  திரைக்கதை அமைப்பதில் 'எச்சரிக்கை'யாக இருங்கள் சர்ஜுன். இது நல்ல சினிமாவை கொண்டாடும் இடம். 
'லக்ஷ்மி' படத்தின் விமர்சனத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்..!

No comments:

Post a Comment